தர்மபுரி கலவரம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

         தர்மபுரி மாவட்ட கலவரம் தொடர்பாக, ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் பகுதியில் சாதி மறுப்பு காதல் திருமணம் எதிரொலியாக, ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், மற்றொரு பிரிவினரின் 268 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் லில்லி, காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் ஆகிய இருவரும் நாய்க்கன்கொட்டாய் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தை தடுக்கத் தவறியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலவரம் நடக்க வாய்ப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறைக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்ததாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்