வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு நாளையே தூக்கு 




          வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு நாளையே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என கர்நாடகா மாநிலம் பெல்காமில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
  இதற்கிடையில்நிலக்கண்ணி வெடித்தாக்குதலில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை  ரத்து செய்யக் கோரி, வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர்  அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
   நாளையே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற அச்சத்தில் 4 பேரது உறவினர்களும் உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர்.
   மேலும் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் கோரியிருந்தனர். ஆனால் மனுவை விசாரித்த நீதிபதி உடனடியாக விசாரிக்க மறத்து விட்டது. மேலும் நாளையே தூக்கு நிறைவேற்றடுகிறது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என நீதிபதி அல்டமாஸ் கபீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிராகரிக்கப்பட்ட கருணை மனு: வீரப்பன் கூட்டாளிகள் மீசை மாதையன், ஞானபிரகாஷ், பிலவேந்திரன்,சைமன் ஆகிய 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக அளிக்கப்பட்ட கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி கடந்த 11-ம் தேதி நிராகரித்தார்.
   இத்தகவலை உறுதிசெய்த கர்நாடகா சிறைத்துறை டி.ஜி.பி, கருணை மனு நிராகரிக்கப்பட்ட 4 பேருக்கும் 14 நாட்களில் தண்டனை நிறைவேற்றப்படும் என கடந்த 13ம் தேதியன்றே தெரிவித்தார்.
  மேலும் 14 நாட்களுக்குள் தண்டனையை நிறைவேற்ற, தூக்கிற்கான தேதியை மாஜிஸ்திரேட் நிர்ணயிப்பார் எனவும் தெரிவித்திருந்தார்.
  தற்போது கர்நாடகாவின் பெல்காம் சிறையில் உள்ள இந்த நான்கு பேரும் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் மீதான வழக்கு விவரங்கள் பின்வருமாறு:-
   1991-ஆம் ஆண்டு கர்நாடக பகுதியிலுள்ள காவல்நிலையத்தை வீரப்பன் கூட்டாளிகள் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். 1993-ஆம் ஆண்டு பாலாறு பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் காவல்துறையினர் 22 பேர் கொல்லப்பட்டனர்.
   இந்த இரு வழக்குகளில் தொடர்புடையதாக 100-க்கும் அதிகமானோரை கர்நாடக காவல்துறை கைது செய்தது. இதில் பிலவேந்திரன், ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன் ஆகிய 4 பேருக்கும் மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
   இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வீரப்பன் கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்தது குறைவானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
   மேலும் பிலவேந்திரன், ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன் ஆகிய 4 பேருக்கும் கடந்த 2004-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 4 பேரும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

                                                                                                       -பசுமை நாயகன்