தர்மபுரி கலவரம் – தேசிய ஆணையத்தின் தலைவர் ஆய்வு

         தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வன்முறையால் வீடு இழந்தவர்கள் தங்குவதற்கு போதிய ஏற்பாடுகள் இல்லாததால், அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் புனியா ஆய்வு செய்து வருகிறார்.
நாயக்கன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பக்கத்து ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்துத் திருணம் செய்து கொண்டதை அடுத்து கடந்த புதன் கிழமை இந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இதில், இருநூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. ஓட்டுவீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன.
இதனையடுத்து வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உடமைகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டதை அடுத்து, மாற்று உடைக்கும் வழி இல்லாமல் தவித்து வருகின்றனர் இவர்கள். குழந்தைகளுடனும் முதியவர்களுடன் தெருவோரங்களில் படுத்து உறங்குவதால், பனிக்கும் குளிருக்கும் ஈடுகொடுக்க முடியாமல் பரிதவிக்கின்றனர். கலவரம் பாதித்த பகுதிகளை தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் புனியா ஆய்வு செய்து வருகிறார்.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்