தருமபுரி கலவரம் – மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

   ருமபுரி மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், வீடுகளுக்கு திரும்ப முடியாத சூழ்நிலை நிலவுகிறது. வன்முறையின் தொடர்ச்சியாக 3 கிராமங்களுக்கு மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி அருகே நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் ஒரு காதல் திருமணத்தால் ஏற்பட்ட கலவரத்தின் விளைவுகள் இன்னமும் தொடர்கின்றன. இந்த கலவரத்தில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதால், பல வீடுகளின் நில பட்டா, பள்ளி சான்றிதழ்கள், பாடபுத்தகம், நகை , பணம் என அனைத்தும் தீக்கு இரையாகியுள்ளன.
அதுமட்டுமல்லாமல்,  வீடுகளிலிருந்த மின் வயர்கள், மின் மீட்டர்களும் சேதமடைந்துள்ளன. அதனால், நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால்,இந்த கிராமத்தினர் வீடுகளுக்குள் செல்லாமல், தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
அரசின் சார்பில் உணவு உள்ளிட்ட சில அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  சேதமடைந்த பொருட்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த கிராமங்களுக்கு மீண்டும் எப்போது மின் இணைப்பு கிடைக்கும் என்று மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, சேதமடைந்த மின் வயர்கள், மீட்டர்களை மாற்றிய பிறகே மின்சாரம் வழங்கப்படும் என்று கூறினர். அதற்கு, சில நாட்கள் பிடிக்கும் என்றும் தெரிவித்தனர்.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்