கோடையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் நீர் தேடி அலையும் யானைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 5 யானைகள் உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் உயிரிழந்துள்ளன.
குடிநீர் தேடி காடுகள் முழுவதும் அலையும் யானைகள் நீர் கிடைக்காமல் உயிரிழந்துவிடுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் யானைக் குட்டிகளே தண்ணீர் மற்றும் உணவின்றி பலியாகி வருகின்றன. குறிப்பாக பென்னாகரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நீருக்காக அலைவது அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் வனப்பகுதிகளில் யானைகளுக்கு தேவையான தண்ணீர் குடில்களை அமைத்து தர வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.