ஜாதி தலைவர்கள் மிரட்டல் -துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்க வேண்டும்'


       ஜாதி கொடுமை தாங்க முடியவில்லை; எங்கள் சுயபாதுகாப்புக்கு, துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்க வேண்டும்' என, வேற்று ஜாதியைச் சேர்ந்த இளைஞரை, காதல் திருமணம் செய்த பெண், தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்தில் முறையிட்டு உள்ளார்.

கலப்பு திருமணம்

     தர்மபுரி மாவட்டம், வி.கொங்கரப்பட்டி, வேப்பமரத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதா. இவர், ஆதிதிராவிடர் இனத்தவர். இவரும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும், மூன்றாண்டுகளுக்கு முன், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, சுதீப் என்ற, ஒன்றரை வயது மகன் உள்ளான்.
   இந்நிலையில், சென்னையில் உள்ள, தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்தில், சுதா நேற்று அளித்த புகார் மனு:
தர்மபுரி இளவரசன் - திவ்யா காதல் திருமண விவகாரத்துக்கு பின், ஊர் பஞ்சாயத்தார், எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.பொது குழாயில் தண்ணீர் பிடிக்கவும், ஊரில் உள்ள கோவிலுக்கு செல்லவும், தடை விதித்துள்ளனர்.இதுதொடர்பாக, பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், நடவடிக்கை இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 'எங்கள் குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டது இருந்தும், எங்களை மிரட்டும் வேலையை, ஊரில் உள்ள ஆதிக்க ஜாதியினர் செய்து வருகின்றனர். எங்கள் பிரச்னை தொடர்பாக, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையிலும், பலன் கிடைக்கவில்லை.எங்கு சென்றாலும், எங்களை சுற்றி வந்து மிரட்டுகின்றனர். எங்கள் மீது அளிக்கப்படும் பொய் புகார்கள் மீது, காவல் துறையினர் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.

பொய் வழக்குகள்

       இதனால், எங்களின் அன்றாட வாழ்வு, மிகுந்த அச்சத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. எனவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். எங்கள் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட எங்கள் இருவருக்கும், அரசு வேலை அளிக்க வேண்டும். எங்களின் உயிரை பாதுகாக்க, துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் சுதா கூறியுள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் வைக்கோல் கிடைக்காமல் கால்நடைகள் பாதிப்பு

வைக்கோல்

     தருமபுரி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியை அடுத்து வெளிமாவட்டங்களில் இருந்து கால்நடைகளுக்கான வைக்கோல் கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது.
    தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதியில், கடந்த 5 வருடங்களாக பருவமழை பொய்த்து போனதால், விவசாய தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் புதுவை, விழுப்புரம், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, லாரிகள் மூலம் வைக்கோல் கொண்டுவந்து தர்மபுரி மாவட்டத்தில் விற்கப்படுகிறது.
  அதிக விலை கொடுத்து வைக்கோலை வாங்குவதால், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இளவரசன் மரணம் உண்மை நிலை அறிய விசாரணை ஆணையம்: முதலமைச்சர் உத்தரவு

 

லப்புத் திருமணம் செய்து கொண்ட தருமபுரியைச் சேர்ந்த இளைஞர் இளவரசன் கடந்த 4ம் தேதியன்று தருமபுரியில் ரயில்வே இருப்புப் பாதையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
   இந்நிலையில் இளவரசன் மரணம் குறித்து உண்மை நிலை அறிய விசாரணை ஆணையம் அமைத்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
   இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் : இளவரசன் இறப்பு குறித்து பல்வேறு கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன,. சமூக ஆர்வலர்களும், தனி நபர்களும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்துக்களை எழுப்பி வருகின்றனர். இறந்த இளவரசனன் தந்தையும் இளவரசன் இறப்பில் சந்தேகங்களை எழுப்பியுள்ளார். எனவே இளவரசன் இறப்பின் உண்மை நிலையை அறியும் பொருட்டு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
   கடந்த ஆண்டு தருமபுரியில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.  
   பாதிக்கப்பட்ட 326 ஆதி திராவிடர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து  தலா 50 ஆயிரம் வீதம்  ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
       தேவையான மறுவாழ்வுப் பணிகள் நடைபெற்றதன் மூலம் அங்கு விரைவில் இயல்பு நிலை திரும்பியதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 
    இதற்கிடையில் தர்மபுரியைச் சேர்ந்த இளவரசனின் மரணம், தற்கொலையே என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க், இளவரசனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து தற்கொலைக்கான கடிதம் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.காவல்துறையினர் செல்வதற்குமுன் அந்த கடிதத்தை இளவரசனின் உறவினர் ஒருவர் எடுத்து வைத்திருந்ததாகவும் அதனை தற்போது மீட்டிருப்பதாகவும் அஸ்ரா கார்க் கூறினார்.

    4 பக்கங்களைக் கொண்ட அந்த கடிதத்தில், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என இளவரசன் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.இருப்பினும் கையெழுத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய கடிதத்தை ஆய்வுக்கு அனுப்பியிருப்பதாக காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்டத்தில் குடிநீரின்றி உயிரிழக்கும் யானைகள்


         கோடையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் நீர் தேடி அலையும் யானைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 5 யானைகள் உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் உயிரிழந்துள்ளன.
    குடிநீர் தேடி காடுகள் முழுவதும் அலையும் யானைகள் நீர் கிடைக்காமல் உயிரிழந்துவிடுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் யானைக் குட்டிகளே தண்ணீர் மற்றும் உணவின்றி பலியாகி வருகின்றன. குறிப்பாக பென்னாகரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நீருக்காக அலைவது அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
              இந்நிலையில் வனப்பகுதிகளில் யானைகளுக்கு தேவையான தண்ணீர் குடில்களை அமைத்து தர வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

15 பேர் தருமபுரியில் மாணவர்கள் பட்டினிப் போராட்டம்

   இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்க வலியுறுத்தி தருமபுரி கல்லூரி மாணவர்கள் நடத்தும் பட்டினிப் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது.
   கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து, 30 மாணவர்கள் விடுதியின் வாயிலில் அமர்ந்து பட்டினிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களில் இரு மாணவர்களுக்கு உடல்நிலை மோசமானதையடுத்து, அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
   மேலும் நேற்றிரவு 8 பேர், இன்று அதிகாலை 5 பேர் என இதுவரை 15 பேரின் உடல்நிலை மோசமானதால் அவர்களனைவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
   ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை மாநாட்டில், இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அதிபருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.

                                                       --இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

    ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கலாகும் நிலையில், பல்வேறு தொழில் வளங்களைக் கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தை, பிற பகுதிகளுடன் இணைக்க ரயில் வசதி இல்லை என்பது அந்த மாவட்ட மக்களின் நீண்டகால ஆதங்கமாகும். இதேபோன்று சேலத்தில் இருந்து தருமபுரி வழியாக பெங்களூருவுக்கு மின்சார ரயில் மற்றும் இரு வழிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
  கனிமவளம், மாம்பழம்,ரோஜா என இயற்கை வளங்களைக் கொண்ட மாவட்டம் கிருஷ்ணகிரி. இவற்றின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருவாயை ஈட்டித் தரும் இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களை, பிற பகுதிகளுடன் இணைக்க ரயில் வசதி கிடையாது. ஓசூர் வழியாக பெங்களூரு, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில இடங்களுக்கு மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தென் தமிழகத்திற்கும்,, சென்னை உள்ளி்ட்ட வட மாவட்டங்களுக்கும் ரயில் வசதி அறவே இல்லாதது அவர்களின் மாபெரும் கவலையாகும்.
  ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர், கந்திலி, பர்கூர், ஒரப்பம், கிருஷ்ணகிரி, சூளகிரி வழியாக ஓசூர் வரை 101 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரயில் பாதை அமைத்து போக்குவரத்து தொடங்க வேண்டும் என்பது அவர்களின் 50 ஆண்டுகால கோரிக்கையாகும்.
  இதேபோல், தருமபுரியில் இருந்து மொரப்பூர் வரை ரயில் பாதை அமைக்கப்படும் என 5 ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்னவானது எனக் குமுறுகின்றனர் தருமபுரி மாவட்ட மக்கள்... இவ்விரு நகரங்களுக்கும் இடையிலான தூரம் வெறும் 30 கிலோ மீட்டர்தான்.
  இதுபோன்று, தஞ்சை -அரியலூர் இடையே ரயில் பாதை அமைக்கப்படும் என முன்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம் காற்றோடு கலந்துவிட்டதா? என தஞ்சை மாவட்ட மக்கள் வினவுகின்றனர். இந்த ரயில் பாதை அமைந்தால், தஞ்சை-சென்னை இடையிலான பயண தூரம் குறையும் என கூறுகின்றனர் தஞ்சை மக்கள்.     


                                   இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்