கலப்புத் திருமணம் செய்து கொண்ட தருமபுரியைச் சேர்ந்த இளைஞர் இளவரசன் கடந்த 4ம் தேதியன்று தருமபுரியில் ரயில்வே இருப்புப் பாதையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் இளவரசன் மரணம் குறித்து உண்மை நிலை அறிய விசாரணை ஆணையம் அமைத்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் : இளவரசன் இறப்பு குறித்து பல்வேறு கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன,. சமூக ஆர்வலர்களும், தனி நபர்களும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்துக்களை எழுப்பி வருகின்றனர். இறந்த இளவரசனன் தந்தையும் இளவரசன் இறப்பில் சந்தேகங்களை எழுப்பியுள்ளார். எனவே இளவரசன் இறப்பின் உண்மை நிலையை அறியும் பொருட்டு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தருமபுரியில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட 326 ஆதி திராவிடர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து தலா 50 ஆயிரம் வீதம் ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தேவையான மறுவாழ்வுப் பணிகள் நடைபெற்றதன் மூலம் அங்கு விரைவில் இயல்பு நிலை திரும்பியதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தர்மபுரியைச் சேர்ந்த இளவரசனின் மரணம், தற்கொலையே என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க், இளவரசனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து தற்கொலைக்கான கடிதம் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.காவல்துறையினர் செல்வதற்குமுன் அந்த கடிதத்தை இளவரசனின் உறவினர் ஒருவர் எடுத்து வைத்திருந்ததாகவும் அதனை தற்போது மீட்டிருப்பதாகவும் அஸ்ரா கார்க் கூறினார்.
4 பக்கங்களைக் கொண்ட அந்த கடிதத்தில், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என இளவரசன் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.இருப்பினும் கையெழுத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய கடிதத்தை ஆய்வுக்கு அனுப்பியிருப்பதாக காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் தெரிவித்தார்.